புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை வேடிக்கை பார்க்கும் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என பாஜக கூறியுள்ளது. பாஜக தேசிய பொதுச் செயலாளர் கவுரவ் பாட்டியா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி பகுதியில் பழங்குடியின பெண்களை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் பாலியியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பாதுகாப்பு அளிக்கிறார். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காட்டாட்சி நடைபெறுகிறது. இதற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதை அராஜக ஆட்சி நடத்தும் மம்தா பானர்ஜி வேடிக்கை பார்க்கிறார். அவர் முதல்வர் பதவியில் நீடிக்க உரிமை இல்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் திரிணமூல் ஆட்சியை மக்கள் அகற்றுவது உறுதி.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க பாஜக துணை நிற்கும் மேற்குவங்கத்தில் நிலவும் மோசமான சூழலால், கொல்கத்தா உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து மாநில அரசுக்கு நோட்டீஸ் வழங்குகிறது. மக்களை பாதுகாப்பதற்கு பதில், வேட்டையாடும் மிருகமாக மம்தா பானர்ஜி மாறிவிட்டார். இவ்வாறு கவுரவ் பாட்டியா கூறினார்.