கர்நாடகாவில் மகளின் காதலனைக் கொன்ற தந்தை, சடலத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பெங்களூரில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தேவனசந்திரா லே அவுட்டைச் சேர்ந்தவர் ரியாஸ் கான் (39). ஆட்டோ ஓட்டுநரான இவரது 14 வயது மகள் ஷமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார். சில மாதங் களுக்கு முன்புவரை ரியாஸ்கான் தனது குடும்பத்தினருடன் ஜெய நகர் அருகே உள்ள சித்தாபுராவில் வசித்து வந்தார்.
அங்கு இருந்தபோது சாதிக் பாஷா (20) என்பவருக்கும் ஷமீராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை அறிந்த ரியாஸ்கான் இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனாலும் சாதிக் பாஷா, ஷமீராவை அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ்கான், 2 மாதங்களுக்கு முன்பு அவருடன் சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 30-ம் தேதி ஷமீரா திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த 2-ம் தேதி தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சாதிக் பாஷாவின் வீட்டுக்குச் சென்று விசாரித் துள்ளார். ஷமீரா அங்கு வரவில்லை என கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து, சாதிக் பாஷாவின் நண்பர் களிடம் ரியாஸ் கான் விசாரித்திருக்கிறார். அப்போது சாதிக் பாஷாவும் ஷமீராவும் பன்னேருகட்டா சாலையில் உறவினரின் வீட்டில் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த புதன்கிழமை அங்கு சென்ற ரியாஸ்கான், சாதிக் பாஷாவிடம் தனது மகளை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வியாழக்கிழமை காலை தனது நண்பரின் வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.
இதையடுத்து, சாதிக் தனது நண்பருடன் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் ஹொம்பதேவனசந்திராவுக்கு சென்றுள்ளார். அப்போது “என்னுடைய மகளுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை. அதனால் திருமணம் செய்து வைக்கமுடியாது” என ரியாஸ்கான் கூறியுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், ரியாஸ் கான் தனது சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாதிக்கின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் வயிறு,நெஞ்சு ஆகிய பகுதிகளிலும் பல முறை குத்தி கொலை செய்துள்ளார். தடுக்க வந்த அவரது நண்பரையும் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த பாஷாவின் நண்பர் பெங்களூர் நிம்ஷான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சாதிக் பாஷாவின் உடலை வெட்டி சாக்குமூட்டையில் கட்டி, இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு 25 கி.மீ. தொலைவிலுள்ள கிருஷ்ணராஜபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இது தொடர்பாக ரியாஸ் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.