இந்தியா

ரஜபுத்திரர்களை பெருமைப்படுத்தியுள்ளது பத்மாவத்: போராட்டத்தை வாபஸ் பெற்றதற்கு கர்னி சேனா சொல்லும் காரணம்

ஐஏஎன்எஸ்

ரஜபுத்திரர்களை 'பத்மாவத்' திரைப்படம் பெருமைப்படுத்தியுள்ளதாலும் அலாவுதீன் கில்ஜி - ராணி பத்மினி இடையே கண்டனத்துக்குரிய காட்சிகள் ஏதும் இல்லாததாலும் கர்னி சேனா போராட்டத்தை வாபஸ் பெறுகிறது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ‘பத்மாவதி’ திரைப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் சித்தூர் ராணி பத்மினியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்தும் படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என மாற்றம் செய்தும் திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.

பத்மாவத் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து ஹரியாணா மாநிலம் குருகிராமில் வன்முறை நடந்தது. அப்போது, பள்ளிக்கூட பேருந்து மீது சில வன்முறையாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

அப்போது உள்ளே இருந்து குழந்தைகள் அச்சத்தில் அலறினர். மேலும், சீறிவரும் கற்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தலையில் கைகளை வைத்து மறைத்தவாறு பஸ் இருக்கையின் கீழ் புகுந்து கொண்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. 15 விநாடிகள் நீளும் அந்த வீடியோ காட்சி காண்போரை பதறவைத்தது. இதற்கு இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது.

இத்தனை களேபரங்கள் நடந்த நிலையில், தற்போது ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புட் கர்னி சேனா போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைப்பின் மும்பை பிரிவு தலைவர் யோகேந்திர சிங் கட்டார் கூறும்போது, "எங்கள் அமைப்பின் தேசியத் தலைவர் சுக்தேவ் சிங் கோகமாடி உத்தரவின் பேரில் அமைப்பினர் சிலர் படத்தைப் பார்த்தோம். படம் உண்மையில் ரஜபுத்திரர்களின் வீரத்தை பறைசாற்றியுள்ளது. ஒவ்வொரு ரஜபுத்திரரும் இப்படத்தைப் பார்த்து பெருமைப்படுவர்.

மேலும், டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி - ராணி பத்மாவதி இடையே கண்டனத்துக்குரிய காட்சிகள் ஏதுமில்லை. எனவே கர்னி சேனா போராட்டத்தை வாபஸ் பெறுகிறது. மேலும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் இப்படம் வெளியாக கர்னி சேனா உதவும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT