மும்பை: மும்பையின் முன்னாள் என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது அமலாக்கத்துறை புதிய பணமோசடி வழக்கு பதிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது மகன் ஆரியன் கானை போதை பொருள் வழக்கில் இருந்து காப்பாற்ற பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் குடும்பத்தினரிடம் லஞ்சம் கேட்தாக சிபிஐ தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இப்புதிய வழக்கு பதியப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கினை பதிந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தின் (என்சிபி) சில முன்னாள் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். இதனிடையே, சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் பிரிவில் வேலை பார்த்து வந்த 2008-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான சமீர் வான்கடே, அமலாக்கத்துறையின் கட்டாய நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2021 அக்டோபர் 2-ம் தேதி, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர். கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் (23) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் மொத்தம் 21 பேர் கைதாகினர்.
இதனிடையே ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்ற ரூ.25 கோடி லஞ்சம் வாங்கியதாக கடந்த மே மாதம் சமீர் வான்கடே மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. என்சிபியின் புகாரின் பெயரில் சமீர் வான்கடே மற்றும் பிற அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்சம் தொடர்பான விதிகள் தவிர குற்றச்சதி (ஐபிசி 120-பி), மிரட்டல் (ஐபிசி 388) ஆகிய பிரிவுகளின் கீழ் மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. ஒரு வருடம் கழித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்சிபி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஆனால் ஆர்யன் கான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பரபரப்பான இந்த வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு ஒரு தன்னிச்சையான சாட்சி, (independent witness) என்சிபி அதிகாரிகள் மற்றும் பிறர் ரூ.25 கோடி வஞ்சகமாக கேட்டனர் என்று கூறியது திருப்பத்தை ஏற்படுத்தியது. அதற்கு பின்னர் என்சிபி வான்கடே மற்றும் பிறருக்கு எதிராக துறை ரீதியாக நடத்திய விசாரணையின் தகவல்களை சிபிஐ-உடன் பகிர்ந்து கொண்டது.