இந்தியா

பாஜக கூட்டணியை நோக்கிச் செல்லும் ஆர்எல்டி!

செய்திப்பிரிவு

தனது தாத்தா சரண் சிங்குக்கு ‘பாரத ரத்னா’ விருதை அறிவித்ததன் மூலம் மத்திய அரசு தனது இதயத்தை வென்றுவிட்டதாக ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூறினார். முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய 'பாரத் ரத்னா' விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து சவுத்ரி சரண் சிங்கின் பேரனும் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி நேற்று கூறும்போது, “முந்தைய அரசுகளால் இன்று வரை செய்ய முடியாததை பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை நிறைவேற்றி உள்ளது.

பிரதான நீரோட்டத்தில் பங்கு வகிக்காத மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேர தயாராகி விட்டீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? இன்று அதை நான் எப்படி மறுக்க முடியும்?” என்று ஜெயந்த் சவுத்ரி கூறினார்.

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடனான தனது கூட்டணியை ஆர்எல்டி முறித்துக் கொண்டு பாஜக அணியில் சேரப்போவதாக தொடர்ந்து ஊகங்கள் வெளி வந்த நிலையில் ஜெயந்த் சவுத்ரி இவ்வாறு கூறியுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி – ஆர்எல்டி கூட்டணி கடந்த ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆர்எல்டிக்கு உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 7 இடங்களை அளித்தது. ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு உ.பி.யில் ஆர்எல்டி செல்வாக்கு பெற்றுள்ளது.

எனவே இந்த சமூகத்தினர் வசிக்கும் முசாபர் நகர், கைரானா, பிஜ்னோர், மதுரா, பக்பத், அம்ரோகா, மீரட் போன்ற பகுதிகளில் ஆர்எல்டி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. உ.பி.யில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதியும் ஆர்எல்டியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் சமாஜ்வாதி 111 இடங்களிலும் ஆர்எல்டி 8 இடங்களிலும் வென்றன.

2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் மதுரா, பக்பத், முசாபர்நகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றிலும் தோல்வி அடைந்தது.

அகிலேஷ் யாதவ் கருத்து இதற்கிடையில் பாஜக – ஆர்எல்டி கூட்டணிக்கான வாய்ப்பு குறித்து சமாஜ் வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “யாரை எப்போது எடுக்க வேண்டும் என்பது பாஜகவுக்கு தெரியும். எப்படி ஏமாற்ற வேண்டும் என்பதும் அக்கட்சிக்கு தெரியும். சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக நேர்மையின்றி நடந்துகொண்டதை நீங்கள் பார்த்தீர்கள். எனவே யாரை, எப்போது வாங்க வேண்டும் என்பதும் அக்கட்சிக்கு தெரியும்” என்றார்.

SCROLL FOR NEXT