புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது இரு மகள்கள் ஆகியோருக்கு வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-2009-ம் ஆண்டு வரைமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தார். அப்போது, ரயில்வேயில் குரூப்-டி பணிகளுக்கு, நிலத்தை லஞ்சமாகப் பெற்று வேலை வழங்கியதாக குற்றச் சாட்டு எழுந்தது.
இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ராப்ரி தேவி, அவரது மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகிய மூவருக்கும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மூவரும் இந்த வழக்கில் தங்களுக்கு இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், மூவருக்கும் பிப்ரவரி 28-ம்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.