எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட இந்திய படை வீரர் சத்யஷீல் யாதவை, விசாரணைக்குப் பின் பாகிஸ்தான் ராணுவம் முறைப்படி ஒப்படைத்தது.
கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் ராணுவ முகாமில் விசாரிக்கப்பட்டு வந்த சத்யஷீல், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே செனாப் நதியில், படகு மூலம் ரோந்துப் பணியில் இருந்த ராணுவ வீரர் சத்யஷீல் யாதவ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
நதியில் அடித்து செல்லப்பட்ட சத்யஷீல், பாகிஸ்தானின் சியால்கோட்டிற்கு 400 கி.மீ அருகே கரை சேர்ந்தார். அப்போது அவரைக் கண்ட அந்த கிராம மக்கள், சந்தேகத்தின் பேரில் அவரை பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அவரிடம் பாகிஸ்தானின் உளவு அமைப்பு விசாரணை நடத்தியது.
இந்திய ராணுவ வீரர் உடையில் ஒருவரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்த நிலையில், நதியில் அடித்து செல்லப்பட்ட ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவம் விசாரணைக்காக பிடித்து வைத்திருந்தது உறுதியானது. இதனை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து செல்லப்பட்ட சத்யஷீலை விடுவிக்கும்படி இந்தியா வலியுறுத்தியது. இதற்கான பேச்சுவார்த்தையில், இந்திய வீரரை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
அதன்படி, இன்று மாலை இஸ்லாமாபாதில் இந்திய அதிகாரிடம் சத்யஷீல் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்காக பிடித்து வைத்திடுந்த நாட்களில், இந்திய வீரரை பாகிஸ்தான் ராணுவம் நல்ல முறையில் நடத்தியது என்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தஸ்னிம் அஸ்லம் கூறினார்.
பின்னர் பேசிய சத்யஷீல் யாதவ், "நதியில் தண்ணீர் வேகமாக பாய்ந்தபோது என்னோடு இருந்த வீரர்கள் நீந்தி சென்று கரை சேர்ந்தனர். ஆனால் நான் பயணித்த படகு, காற்றின் திசையால் பாகிஸ்தான் பக்கம் இழுத்துச் சென்றது. அங்கு, பாகிஸ்தான் விரர்கள் எனது விவரங்களை கேட்டனர். என்னை நல்ல முறையில் நடந்துகொண்டனர்" என்றார்.