பெங்களூரு: கர்நாடகாவில் ஹூக்கா போதைப் பொருளை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும், அது தொடர்பான விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியது: “கர்நாடகாவில் அதிகரித்து வரும் ஹூக்கா ( நீரை வடிக்கட்டி குழாய் மூலம் புகைப்பிடிப்பது ) பயன்பாட்டால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஹூக்கா பார்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து வல்லுநர் குழு அமைத்து பல கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் ஹூக்கா பயன்படுத்தினால் மூளை, இதயம், நுரையீரல் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் ஹூக்கா பயன்படுத்தவும், விற்பனை செய்யவும், அதனை பதுக்கி வைக்கவும், அது தொடர்பான விளம்பரங்களை வெளியிடவும் உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. வியாழக்கிழமை முதல் ஹூக்கா பார்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வகையான ஹூக்கா, புகையிலை அல்லது நிகோடின் இல்லாத ஹூக்கா, இனிப்பு ஹூக்கா, ஷீஷா (ஹூக்கா நீர் குழாய்) மற்றும் ஹூக்கா தொடர்புடைய அனைத்து தயாரிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை மீறுவோர் மீது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலச் சட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.