இந்தியா

பாஜக அரசு மோசமான நோயாளி: ப.சிதம்பரம் கடும் சாடல்

பிடிஐ

மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மோசமான நோயாளி என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உண்மையான தகவல்களைக் கூறவும், நிலைமையை உணரவும் மறுக்கிறது என்று சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பு ஏற்ற தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பொருளாதாரத்துக்கு மிகச்சிறந்த மருத்துவர்.

ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கான அவரின் ஆலோசனைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு காது கொடுத்து கேட்பதில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மோசமான நோயாளியாக இருக்கிறது.

பாஜக அரசு தொடர்ந்து அனைத்தையும் மறுத்து வருகிறது. நாட்டின் உண்மையான பொருளாதார சூழலை ஏற்க மறுக்கிறது. விவசாயிகளின் துன்பங்களை ஏற்க மறுக்கிறது.

இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்படுவதை ஏற்க மறுக்கிறது. எதிர்க்கட்சிகளின் விவாதத்தையும் கேட்க மறுக்கிறது.

இப்போது, கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பொருளாதார நலனுக்காக அமர்த்தப்பட்ட டாக்டர்(அரவிந்த் சுப்பிரமணியன்) ஆலோசனைகளையும், நோயை கண்டுபிடிக்கவிட அவரின் முயற்சியையும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய அரசு மறுத்து வருகிறது.

நாடு எனும் வீட்டிலேயே இருக்கும் டாக்டர் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன். அவர் நாள்தோறும் தனது நோயாளிகளை (பொருளாதாரம்) பரிசோதனை செய்து வருகிறார். ஒருவேளை உடல்நலம் சரியில்லாமல் போனால், அதற்கான மருந்துகளையும், மருத்துவ சிகிச்சையையும் அளிக்கிறார்.

ஆனால், மோசமான நோயாளிகள் ஒருபோதம் மருந்துகளையும், மாத்திரைகளையும் எடுக்கமாட்டார்கள். அவர்கள் தங்களுக்குரிய நோயை சொந்தமாக கண்டுபிடித்து, மருந்துகளை சுயமாக எடுத்துக்கொள்வார்கள்.

பட்ஜெட் என்பது, சீர்திருத்தத்துக்கான ஒரு வரைபடம், ஒரு பட்டியலாகும்.

பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பாக 4 வகையான ஆர்எஸ்களை (ஆங்கிலத்தில்RS) குறிக்கிறது. அங்கீகாரம்(Recognition), தீர்மானம்( Resolution) மறுமுதலீடு (Recapitalisation), சீர்திருத்தம் (Reforms) ஆகியவற்றை குறிக்கிறது. இதில் முதல் 3 விஷயங்கள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால், கடைசி வியஷமான வங்கிச்சீர்திருத்தம் செய்யப்படவில்லை.

நாட்டின் ஏற்றுமதி சில ஆண்டுகளாகவே ஓரளவுக்கு முன்னேற்றத்துடனே இருந்து வருகிறது. ஆனால், பணமதிப்பு நீக்கத்துக்கு பின்பும், ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தியபின் வரி வருவாய் அடுத்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT