கருப்பு அறிக்கையை வெளிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

“மோடி அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டவே..” - கருப்பு அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார்.

கருப்பு அறிக்கையை வெளிட்டு மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதேநேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம். நாட்டில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏகள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல காங்கிரஸ் அரசுகளை கவிழ்த்துள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்" என்றார்

முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வார் என கூறப்பட்டது. இந்தநிலையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நிதிநிலைக்குழு தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஜெயந்த் சின்ஹா புதன்கிழமை கூறுகையில், “நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள வெள்ளை அறிக்கை பிரதமர் மோடி இந்தியாவில் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2014ம் ஆண்டுக்கு முன்பு, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் இந்தியா பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு ஆட்சியை விட்டுப் போரும் போது இந்தியாவின் பொருளாதார நிலை எவ்வளவு மோசமாக இருந்தது, மோடி தலைமையிலான அரசு அதில் எவ்வாறு நேர்மறையான மாற்றத்தினை கொண்டுவந்தது என்பதை எடுத்துக்காட்டும். முந்தைய யுபிஏ ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமான ஐந்தில் ஒன்றாக இருந்தது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. பணவீக்கம் 10 சதவீதமாக அதிகரித்து இருந்தது. வங்கிகளின் என்ஏபி 10 சதவீதமாக உயர்ந்திருந்தது. நாடு திருப்பிச் செலுத்தும் சமநிலையில் பிரச்சினைகளை சந்தித்தது.

வெள்ளை அறிக்கையில் நமது இந்திய பொருளாதாரம் (2014ம் ஆண்டுக்கு முன்பு) எந்தநிலையில் இருந்தது. என்ன மாதிரியான பொருளாதார பிரச்சினைகளை நாம் சந்தித்தோம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிப்ரவரி 1-ம் தேதி, 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர், காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியையும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT