ஏறக்குறைய மக்களால் மறந்து விட்டதாகக் கருதப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது ரேடியோ. இணையதளம், தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்கள் இருந்தாலும் ரேடியோவுக்கு இன்னும் செல்வாக்கு குறையவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது ரேடியோ. அச்சு ஊடகம், தொலைக் காட்சி, இணையதளம், சமூக இணைய தளம், டிஜிட்டல் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள், சுவர் விளம் பரங்கள், துண்டு பிரசுரங்கள் என அனைத்து வகைகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இவ்வகையில் இந்தியாவில் 15.8 கோடி நேயர்களைக் கொண்டுள்ள ரேடியோவும் தேர்தல் பிரச்சாரத்தால் புத்துயிர் பெற்றுள்ளது.
ரேடியோவில் விளம்பரம் செய்வதற்காகவே தனியார் முகவர்களை அரசியல் கட்சிகள் தேடிப்பிடித்து வருகின்றன. பிரச்சாரப் பாடல்கள், புதுமையான விளம்பரங்கள் என ரேடியோவில் பிரச்சாரம் களைகட்டுகிறது.
மொத்தம் 15.8 கோடி நேயர்கள் இருந்தாலும், அதில் 1.06 கோடிப் பேர் பண்பலை ஒலிபரப்புகளை (எப்.எம்.) அதிக அளவில் கேட்கின்றனர். இந்தியாவில் 86 நகரங்களில் 245 தனியார் பண்பலை ஒலிபரப்பு (எப்.எம். ரேடியோ) நிலையங்கள் உள்ளன.
இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த தனியார் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் கூறியதாவது:
ரேடியோவில் விளம்பரப் பாடல்கள் 30 நொடிகளில் இருந்து 3 நிமிடங்கள் வரை ஒலிபரப்பப் படுகின்றன. 10 நொடிகளுக்கு ரூ.1,100 என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரப் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.
காங்கிரஸும், பாஜகவும்தான் ரேடியோ மூலம் பிரச்சாரம் செய்வதில் முன்னணியில் உள்ளனர்.