புதுடெல்லி: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான லாவலின் ஊழல் முறைகேடு வழக்கு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், செங்குளம், பன்னியார் ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையங்களை புனரமைக்க கடந்த 1995ம் ஆண்டு கேரள அரசு, கனடாவின் எஸ்என்சி - லாவலின் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த நீர்மின் நிலையங்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவற்றின் ஜெனரேட்டர்களின் திறனை மேம்படுத்தினால் போதும் என்றும் மத்திய மின்சார ஆணையம் தனது பரிந்துரையை அளித்த நிலையில், அதனை புறக்கணித்து இந்த ஒப்பந்தத்தை கேரள அரசு மின்சார வாரியம் மேற்கொண்டதாகவும் புகார் எழுந்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தால் கேரள அரசு மின்சார வாரியத்துக்கு ரூ. 86.25 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த முறைகேட்டில், அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் பினராயி விஜயன் உள்பட 7 பேருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அது தனது அறிக்கையில், லாவலின் நிறுவனத்தின் விருந்தினராக கடந்த 1997-ம் ஆண்டு பினராயி விஜயன் கனடாவுக்குச் சென்றதாகவும், வெறும் ஆலோசனை நிறுவனமான லாவலினிடம், நீர்மின் நிலையத்தை புனரமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருந்ததாகவும் குற்றம் சாட்டி இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ தனது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை எனக் கூறி கடந்த 2013-ம் ஆண்டு பினராயி விஜயனையும் மற்ற 6 பேரையும் விடுவித்தது.
இதையடுத்து, இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம், பினராயி விஜயன் உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதே ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. எனினும், இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, கடந்த 2017 முதல் இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவதாக முறையிட்டார். வழக்கை மார்ச் அல்லது ஏப்ரலுக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மார்ச், ஏப்ரல் மாதங்களில் விசாரணை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்று கூறியது.