திருமலை: திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்று தொடங்கியது. வரும் 5-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 25 பீடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கருத்தரங்கை திருமலை திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டிபேசும்போது, ‘‘திருப்பதி ஏழுமலையானின் அருளால் நாங்கள் பல தார்மீக நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். தலித கோவிந்தம், மச்ஸ கோவிந்தம், கிரிஜனகோவிந்தம் போன்ற அற்புத திட்டங்களை நிறைவேற்றினோம். மடாதிபதிகள், பீடாதிபதிகளின் அறிவுரைகள், ஆலோசனைகளை நிறைவேற்றுவோம்’’ என்றார்.
தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பேசும்போது, ‘‘வாணி அறக்கட்டளை மூலம் தலித்துகள், மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் இதுவரை 689 கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. 151 பின்தங்கிய பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு’’ உள்ளது என்றார்.