புதுடெல்லி: “பாஜகவை நாம் உறுதியாக எதிர்த்துப் போராடாவிட்டால் நமது இளைஞர்கள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் என அனைவரும் வரும் நாட்களில் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், பிரதமர் மோடி இந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்திவிடுவார்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக கூறினார்.
கிழக்கு டெல்லியில் நடைபெற்ற ‘நியா சங்கல்ப் சம்மவுன்’ பேரணியில் பங்கேற்ற கார்கே கூறியது: “நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்ற பாதகமான சூழ்நிலையில் ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'யை மேற்கொள்கிறார். இந்தப் போராட்டம் தோல்வியடைந்தால் மோடி அரசின் கீழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள். 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'யை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் முடிவு மிகப் பெரிய நடவடிக்கை. பாஜக அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் போராடுகிறார்.
இப்போராட்டம் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் போராட்டம். இதில் நீங்கள் பங்கேற்கத் தவறினால் நிரந்தரமாக பிரதமர் மோடியின் அடிமையாகி விடுவீர்கள். பாஜகவை நாம் உறுதியாக எதிர்த்துப் போராடாவிட்டால், நமது இளைஞர்கள், பெண்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், ஓ.பி.சி.க்கள் அனைவரும், வரும் நாட்களில் பாதிக்கப்படுவார்கள்.ஏனென்றால், பிரதமர், இந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்திவிடுவார்.
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். எங்கே அந்த வேலைகள்? ஒரு வருடத்துக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை கண்டிப்பாக உருவாக்கித் தரமாட்டேன் என்பதே மோடியின் உண்மையான வாக்குறுதி. மேலும், அனைவருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். நாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதாக மோடி அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. எல்பிஜி சிலிண்டரின் விலை, பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி நமது விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு துரோகம் செய்துள்ளார். தனது கருத்துகளை நாட்டின் மீது திணிக்க முயல்கிறார். எங்கள் போராட்டம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிரானது. அவர்கள் நாட்டை ஒழிக்கவும் ஏழைகளை அந்நியப்படுத்தவும் விரும்புகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கைக்கு எதிராக காங்கிரஸார் ஒவ்வொரு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பாஜக ஆட்சியில் நீடிக்க நாட்டு மக்களையும், எதிர்க்கட்சிகளையும் பயமுறுத்துகிறது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 411 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் பல மாநிலங்களில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்தது.
டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பூத் அளவிலான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவின்போது எந்த முறைகேடுகளும் நடக்காமல் இருக்க நல்ல துடிப்பான கட்சித் தொண்டர்களை நியமிக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் டெல்லியில் வெற்றி பெற்றால், நாட்டில் காங்கிரஸ் வெற்றி பெறும். தொண்டர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார் கார்கே.