ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த புதன்கிழமை அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு, புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் சோரன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சம்பய் சோரனை புதிய முதல்வராக்க ஹேமந்த் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியல் வழங்கப்பட்டது.
கடந்த 1-ம் தேதி சம்பய் சோரன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை சம்பய் சோரன் ஜார்க்கண்டின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் வரும் திங்கள்கிழமை (பிப்.5) சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
இந்தநிலையில், திங்கள்கிழமை ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் PMLA சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் பங்கேற்க சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் சோரன், தற்போது 5 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, நீதிபதிகள் அமர்வு “நீங்கள் உயர் நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள். இன்று நாம் ஒருவரை இதுபோன்று அனுமதித்தால், அனைவரையும் பின்னாளில் அனுமதிக்க வேண்டும். நீதிமன்றங்கள் அனைவருக்குமானது. எனவே உயர் நீதிமன்றத்தை நாடுங்கள்" என்று குறிப்பிட்டனர்.