வாராணசியின் வியாஸ் மண்டபத்தில் பூஜைக்கு அனுமதி அளித்ததைஎதிர்த்து முஸ்லிம்கள் நேற்று பந்த் நடத்தினர். இதுதொடர்பான வழக்கு உத்தர பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இது, கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. மசூதி வளாகத்தின் ஒசுகானா அருகில் தென்கிழக்கு பகுதியின் அடிப்பகுதியில் (பாதாளத்தில்) வியாஸ் மண்டபம் அமைந்துள்ளது. இந்த சிறிய மண்டபத்துக்கு விஸ்வநாதர் கோயில் வாயில் எண்-4 வழியாக சென்று வரும் வழி உள்ளது.
கடந்த 1993 முதல் இங்கு நிறுத்தப்பட்டிருந்த அன்றாடப் பூஜைகளை தொடர தற்போது வாராணசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஜனவரி 31-ல் தொடங்கியபூஜைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாராணசியின் முஸ்லிம்கள் நேற்று கடையடைப்பு செய்துஅமைதியாக பந்த் நடத்தினர்.இதையொட்டி பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு இருந்தது. வாராணசியில் முஸ்லிம்களின் முக்கியப் பகுதிகளான தால்மண்டி, சராய் ஹட்டா, பீலி கோத்தி, மதன்புரா உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இதனிடையே, வியாஸ் மண்டபத்தில் பூஜைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்து கியான்வாபியின் அஞ்சுமன் இன்தசாமியா மசூதி அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. இதன் காரணமாக, மசூதி அறக்கட்டளையின் மறுபரிசீலனை மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த மனு மீது 6-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
வியாஸ் குடும்பத்தின் மகள் வழிப் பேரன் சைலேந்தர் குமார் பாதக் என்பவர்தான், வியாஸ் மண்டபத்தில் பூஜை செய்ய அனுமதிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடுத்திருந்தார். இதுகுறித்து சைலேந்திர குமார் பாதக்கின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறும்போது, ‘‘எங்களது முதல் மனு மீது வியாஸ் மண்டபத்தின் பொறுப்பாளராக வாராணசி ஆட்சியரை நியமித்து ஜனவரி 17-ல்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை முஸ்லிம்கள் தரப்பு எதிர்க் கவில்லை. எனவே, ஜனவரி 31-ல்2-வது மனுவுக்கு கிடைத்த பூஜைக்கான அனுமதியை முஸ்லிம்கள் எதிர்க்க முடியாது என்பதால் அவர்களது மறுபரிசீலன மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி உள்ளோம்’’ என்றார்.
வாராணசி சிவில் நீதிமன்றத்தில் இந்த அனுமதி வழக்கையும், சிங்கார கவுரி அம்மன் தரிசனம் தொடர்பான வழக்கையும் விசாரித்தவர் நீதிபதி அஜய் குமார் விஸ்வேஸ். இவர் நேற்றுடன் தன் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால், புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட பின் வியாஸ் மண்டப பூஜை வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.