இந்தியா

கர்நாடகாவில் பாஜகவை விட காங். அரசில் கமிஷன் அதிகம்: முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் வாங்குவதாக புகார் எழுந்தது. இதை அடிப்படையாக வைத்து காங்கிரஸார் பாஜகவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி ஊழல் ஆட்சி பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இதனால் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சிவராமு நேற்று கூறியதாவது: முந்தைய பாஜக ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் வாங்கினர். இப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் அதைவிட அதிகமாக கமிஷன் வாங்குகிறார்கள். இதுபற்றி நான் நேரடியாக முதல்வர் சித்தராமையாவிடம் கூறினேன். ஊழல் காரணமாக ஹாச‌ன் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தேன்.

முதல்வர் சித்தராமையா எனது பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை. நான் வெளிப்படையாக கூறியதால் கட்சிக்கு கட்டுப்படவில்லை என்று எனக்கு முத்திரை குத்திவிட்டனர். ஆனால் கட்சியின் நலனுக்காக உண்மையை தயங்காமல் கூறுவேன். இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதம் அனுப்பப் போகிறேன். இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ சிவராமு கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சிவராமுவின் இந்த குற்றச்சாட்டால் முதல்வர் சித்தராமையாவும் மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளன‌ர்.

SCROLL FOR NEXT