ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக சம்பய் சோரன் நேற்று பதவியேற்றார். 
இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்பு

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக சம்பய் சோரன் (67) நேற்று பதவியேற்றார். அவரோடு இரு அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஜார்க்கண்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த 31-ம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முன்னதாக ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 29, காங்கிரஸ் - 17, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, சிபிஐ (எம்எல்) கட்சிக்கு -1 என அந்த கூட்டணிக்கு 48 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பாஜக - 26, அதன் கூட்டணி கட்சிகள் 6 என பாஜக கூட்டணிக்கு 32 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆட்சியமைக்க 41 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

ஹேமந்த் கைது செய்யப்பட்டநிலையில் அவரது மனைவிகல்பனாவை முதல்வராக்க தீவிரமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஹேமந்தின் அண்ணன் மனைவியும் எம்எல்ஏவுமான சீதா சோரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சம்பய் சோரனை புதிய முதல்வராக்க ஹேமந்த் முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டி யல் வழங்கப்பட்டது.

கடந்த 1-ம் தேதி சம்பய் சோரன், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸை சேர்ந்த ஆலம்கிர் ஆலம், ராஷ்டிரிய ஜனதாதளத்தை சேர்ந்த சத்யானந்த் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இதன்பிறகு முதல்வர் சம்பய்சோரன் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனிடையே குதிரை பேரம் அச்சம் காரணமாக ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் சிறப்புவிமானத்தில் நேற்று ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வரும் 5-ம் தேதி சட்டப்பேரவை கூடும் நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அன்றைய கூட்டத்தில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர்.

புதிய முதல்வர் சம்பய் சோரன் யார்? பிஹாரின் ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள ஜிலிங்கோரா கிராமத்தை சேர்ந்தவர் சம்பய் சோரன். விவசாய குடும்பத்தை சேர்ந்த அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த 1990-களில் ஜார்க்கண்ட் தனி மாநிலம் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் அவர் தீவிரமாக பங்கேற்றார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்து, அதன் நிறுவனர் சிபு சோரனின் நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டார். கடந்த 2000-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் உதயமானது. இதன்பிறகு சராய்கேலா தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனி மாநிலம் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் அதி தீவிரமாக பங்கேற்றதால், 'ஜார்க்கண்ட்டின் புலி' என்ற அடையாள மொழியுடன் அவர் அழைக்கப்படுகிறார்.

சிபுசோரனின் மூத்த மகன் துர்கா சோரன் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரது மனைவி சீதா சோரன் முதல்வர் பதவி கோரி போர்க்கொடி உயர்த்தினார். ஆனால் அவரும்கூட, சம்பய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்க தீவிர எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.

சிபு சோரனின் 2-வது மகன் ஹேமந்த் சோரன் ஊழல் வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை இழந்துள்ள நிலையில் சிம்பய் சோரனிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தின்போது சிபு சோரனின் கடைசி மகன் பசந்த் சோரனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT