கடப்பா: சமீபத்தில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் புதிய மாநிலத் தலைவர் ஷர்மிளா பேசுகையில், “நான் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, என் மகன் ஒய்.எஸ்.ராஜா ரெட்டி. நான் ஒய்.எஸ்.ஆரின் ரத்தம். கடப்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மலமடுகுவில் முதல்வர் ஜெகன் பிறந்த அதே மருத்துவமனையில்தான் நானும் பிறந்தேன். ஜெகன் உடம்பில் பாயும் அதே ரத்தம் என்னுடைய உடம்பிலும் பாய்கிறது. ஜெகன் முதல்வரான பிறகு, தனக்கு ஆதரவாக நின்ற 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஓரங்கட்டி விட்டார். எனது தந்தையின் பாரம்பரியத்தை அவரது சொந்தக் கட்சியான காங்கிரஸ் கட்சியிலேயே தொடர விரும்புகிறேன்” என்று ஒய்.எஸ்.ஷர்மிளா ஆவேசமாக கூறினார்.
இந்த ஆவேச பேச்சுக்குப் பின்னணி என்னவென்றால், அண்ணன் ஜெகனை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலை மட்டுமல்ல, ஆந்திர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு ஜெகன் மோகன் கட்சி தொண்டர்களால் தனது தந்தை பெயரை பின்பற்றுவதற்கு ஒய்.எஸ்.ஷர்மிளா எதிர்கொண்ட வசைபாடுகளே இப்படியான பேச்சுக்கள் எழக் காரணமாக அமைந்தது.
சம்பவம் இதுதான்... ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அதுவரை தெலங்கானாவில் தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்துவந்த ஒய்.எஸ்.ஷர்மிளா, அவரது அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாரிசு யார் என வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகத் தொடங்கியது.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் (ஜெகன்மோகன் கட்சி) தொண்டர்கள் வரிந்துகட்டி கொண்டு #மொருசுபள்ளிஷர்மிளா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். மேலும், ஷர்மிளா இனி தன் தந்தை குடும்பத்தின் மரபு பெயரான ரெட்டி பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் ஜெகன்மோகனே ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாரிசு என்றும் விவாதம் செய்தனர்.
ஒய்எஸ்ஆர் குடும்பம் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒய்எஸ்ஆர் குடும்பத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். அதேவேளையில் மொருசுபள்ளி என்பது ஷர்மிளாவின் கணவர் அனில் குமாரின் குடும்பப் பெயரைக் குறிக்கிறது. அனில் குமார் பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர். இதை வைத்தே இனி ரெட்டி பெயரை பயன்படுத்த கூடாது என்றும், மொருசுபள்ளி என்ற தனது கணவரின் குடும்பத்தின் பெயரை பயன்படுத்த வேண்டும் என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஜெகனின் ஆலோசகருமான சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி ஹைதராபாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "ஷர்மிளாவுக்கு அரசியல்வாதியாகவோ அல்லது ஒய்எஸ்ஆரின் மகளாகவோ சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லை" என்றார். அமைச்சர் ரோஜா பேசுகையில், “ராஜண்ணா (ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி) இறந்தபிறகு, ஜெகன்தான் மீண்டும் ராஜண்ணா ராஜ்ஜியத்தைகொண்டு வந்தார். எனவே ஒய்.எஸ்.ஆர். வாரிசாக ஜெகனை தவிர வேறு எவரும் உரிமை கோர முயற்சிப்பது பயனற்றதாக இருக்கும்" என்று தெரிவித்தார். இப்படியான பேச்சுக்கு பதிலடியாகத் தான் கடப்பா கூட்டத்தில் ஷர்மிளா அவ்வாறு பேசியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த வார்த்தைப் போர் மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.