இந்தியா

கூட்டணி தர்மத்தை சமாஜ்வாதி பின்பற்றவில்லை: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை ஒதுக்குவதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை சமாஜ்வாதி நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதுகுறித்து உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே நேற்று கூறியதாவது: சமாஜ்வாதி கட்சி கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை; கூட்டணியில் ஒருதலைப்பட்சமான அறிவிப்புகளை அக்கட்சி வெளியிடுகிறது. சமாஜ்வாதி வெளியிட்ட பட்டியலில் காங்கிரஸ் உரிமை கோரும் பல இடங்கள் உள்ளன. காங்கிரஸ் எப்போதும் வலுவாக உள்ளது, வரும் ஆண்டுகளில் ஒரு பெரிய சக்தியாக காங்கிரஸ்உருவெடுப்பதை காண்பீர்கள்.

சமாஜ்வாதி கட்சியோ அல்லது வேறு எந்தக் கட்சியோ காங்கிரஸுக்கு சீட் கொடுத்ததாகச் சொன்னால் அது நகைப்புக்குரியது. கூட்டணியில் ஒருதலைப்பட்சமான முடிவுகளுக்கு இடமில்லை. அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி கூட்டாக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவினாஷ் பாண்டே கூறினார்.

SCROLL FOR NEXT