இந்தியா

சஹாரன்பூர் விசாரணைக் குழு அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டது: பாஜக

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை, அரசியல் நோக்கம் கொண்டது என்று பாஜக கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது.

அதேவேளையில், மதவாதம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரைக்கும், பாஜகவின் செயல்பாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதையே சஹாரன்பூர் விசாரணைக் குழு அறிக்கை காட்டுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சஹரான்பூரில் வழிபாட்டுத் தலத்தின் நிலம் தொடர்பான பிரச்சினையில் இரு பிரிவினரிடையே கடந்த ஜூலை 26-ஆம் தேதி மோதல் வெடித்தது. சஹரான்பூரில் குதுப்ஷெஹர் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பழமையான மசூதி ஒன்று, பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இதன் அருகே சீக்கியர்களின் குருத்வாரா அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள நிலம் ஒன்றை இரு பிரிவினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஜூலை 25-ஆம் தேதி நள்ளிரவில் சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து ரகசியமாக சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சித்த தாகக் கூறப்படுகிறது. அதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை அடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

போலீஸார் வந்து சமாதானம் செய்தும் பயனில்லை, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், அதிகாலையில் கைகலப்பாக மாறி கலவரம் ஏற்பட்டது. இரு பிரிவினரும், ஒருவரையொருவர் கல் வீசித் தாக்கித் கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட கடைகளும், இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின. தீயணைப்பு அலுவலகமும் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

விசாரணைக் குழு அறிக்கை

சஹாரன்பூர் கலவரம் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் பொதுப் பணித் துறை அமைச்சர் ஷிவ்பால் யாதவ் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைத்தார்.

அந்த விசாரணைக் குழு தனது அறிக்கையில், பாஜக எம்.பி. ராகவ் லகன்பாலின் தூண்டுதல் காரணமாகவே மதக் கலவரம் வெடித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

பாஜக நிராகரிப்பு

இந்த நிலையில், விசாரணைக் குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள பாஜக, தமது கட்சி மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கருத்து தெரிவித்துள்ளது.

விசாரணைக் குழுவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக, உத்தரப் பிரதேச மாநில அரசின் மெத்தனப்போக்கின் காரணமாகவே, கலவரம் முன்கூட்டியே தடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்

சஹாரன்பூர் விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், "ஒரு பக்கம் செங்கோட்டையில் இருந்தபடி, மதவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்று பிரதமர் முழங்குகிறார். மறுபக்கம், அவரது கட்சியின் தலைவர் ஒருவர்தான் மத வன்முறைக்கு காரணம் என்று விசாரணைக் குழு கூறுகிறது. மோடி தனது கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, உத்தரப் பிரதேசம் முழுவதும் மத வன்முறை அச்சுறுத்தலுக்கு பாஜகவும் சமாஜ்வாதி கட்சியுமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, சஹாரன்பூர் கலவரத்தால் ரூ.244 கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டதாக, அசோசம் ஆய்வு தகவல் வெளியிட்டது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT