இந்தியா

ரேணுகாவின் சிரிப்பு; பிரதமரின் ராமாயண விமர்சனம்: மன்னிப்பு கேட்கச் சொல்லி காங்கிரஸ் அமளி

செய்திப்பிரிவு

மாநிலங்களவை இன்று (வியாழக்கிழமை) காலை ஒத்திவைக்கப்பட்டது. அதற்குக் காரணம், காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா சவுத்ரியின் சிரிப்பும் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த விமர்சனமும்.

பிரதமர் அவரது விமர்சனத்துக்கு மன்னிப்பு கோர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தில் பதிலளித்து நேற்று மாலை பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர், ஜுலை 7, 1998-ல் மாநிலங்களவையில் எழுந்த ஒரு கேள்விக்கு உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி அளித்த பதிலை நினைவுகூர்ந்தார். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உட்பட பல்வேறு பலன்களை அளிக்கும் வகையிலான ஒரு அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறியதாகவும், அதுதான் ஆதார் அட்டை உருவாக்கத்தின் அடிப்படை என்றும் குறிப்பிட்டார். இதைக் கேட்டு மாநிலங்களவயில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா சவுத்ரி வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினார். இதுவரையிலும் அதுபோல் அவையில் நடைபெறாத வகையில் அவரது சிர்ப்பு அதிக ஓசையுடன் இருந்தது. இது பிரதமரின் உரைக்கும் இடையூறு தரும் வகையிலும் இருந்தது.

இதனால் கோபம் கொண்ட அவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு. 'என்ன ஆயிற்று? உங்களுக்கு எதுவும் பிரச்சனை எனில் தயவுசெய்து மருத்துவரிடம் செல்லுங்கள்' எனக் கூறி அவரைக் கண்டித்தார். அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் எனவும் நாயுடு எச்சரித்தார்.

இதைக்கேட்ட பிரதமர், 'தலைவர் அவர்களே! ரேணுகாஜியை எதுவும் கூறாதீர்கள். ராமாயாணம் தொலைக்காட்சி தொடருக்குப் பின் இதுபோல் ஒரு சிரிப்பைக் கேட்க அனைவருக்கும் ஒரு பாக்கியம் கிடைத்துள்ளது’ எனத் தெரிவித்தார். இதை அடுத்து அவை முழுவதிலும் உள்ள உறுப்பினர்கள் வாய்விட்டு சிரித்து பிரதமரின் கருத்தை மிகவும் ரசித்தனர்.

பாஜகவின் ஐ.டி. பிரிவு தலைவர் அமீத் மாளவியா அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பேசிய வீடியோ பதிவைப் பகிர்ந்து 'பிரதமர் குறிப்பிடும் பாத்திரம் யாருடையது? யோசியுங்கள்!’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தொடங்கின.

இந்நிலையில், இன்று மக்களவை கூடியவுடன், பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் எழுந்த அமளியால் அவையின் செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு அவைத் தலைவர் கேட்டுக்கொண்ட பின்பும் அமளி தொடர்ந்ததால் வேறுவழியின்றி அவை 12.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

'பாஜக பெண்கள் விரோத கட்சி'

பிரதமர் பேசியது தொடர்பாக செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சரான ரேணுகா, "இவரிடம் இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இதன்மூலம், பாஜக எப்போதும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது உறுதியாகிறது. காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை பாஜக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதாக பொய் பேசுகிறார். இதில், அத்வானியையும் சாட்சியாக முன்வைத்து பேசியதால் எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT