இந்தியா

ஜெகன் கட்சியிலிருந்து 3-வது எம்.பி. ராஜினாமா

செய்திப்பிரிவு

குண்டூர்: ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில், குண்டூர் அருகிலுள்ள நரசராவ்பேட்டா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஸ்ரீ கிருஷ்ணா தேவராயுலு. இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி வளர்ச்சிக்காக என்னால் முடிந்த பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். ஆனாலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சில வேறுபாடுகளை சந்திக்க நேர்ந்தது. இதனால் அடிமட்ட தொண்டர்கள் முதல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென்றாலும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் எனது தொகுதிக்கு வேறொருவரை வேட்பாளராக நிறுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து எனது பிரச்சினைகளையும், கட்சியில் சிலர் நடந்து கொள்ளும் முறை குறித்தும் எடுத்துக்கூறினேன். எனினும் இதற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதுடன் கட்சியில் இருந்தும் விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மசூலிப்பட்டினம் எம்.பி. வல்லபனேனி பால சவுரி, கர்னூல் எம்.பி. சஞ்சீவ் குமார் ஆகியோர் ஏற்கெனவே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

இவர்களில் வல்லபனேனி பால சவுரி, ஜனசேனா கட்சியில் இணைந்தார். வரும் மக்களவை தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் 3-வது எம்.பி.யாக ஸ்ரீ கிருஷ்ணா தேவராயுலு கட்சியை விட்டு விலகியுள்ளார்.

SCROLL FOR NEXT