புதுடெல்லி: அயோத்தியில் நேற்று (ஜன.22) ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், “ராமர் கோயில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும்” என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜன.22ம் தேதி அயோத்தியில் என்ன பார்க்கப்பட்டதோ அவைகள் வரும் ஆண்டுகளில் நமது நினைவுகளில் பொறிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பிராண பிரதிஷ்டை விழாவின் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வீடியோவைக் காண:
அந்த வீடியோவில், பிரதமர் மோடி ராமர் கோயில் பிராண் பிரதிஷ்டைக்காக நுழைவதும், அப்போது ராம பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தி ஆர்ப்பரிப்பதும் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கருவறையில் நடந்த பூஜைக் காட்சிகள் பின்னணியில் பிரதமரின் பேச்சுடன் இடம்பெற்றுள்ளன. ராமர் கோயில் திறப்பை சிலாகித்து நேற்று பிரதமர் பேசியவற்றிலிருந்து சில தொகுத்து பின்னணியாக சேர்க்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொண்டது.
அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22-ம் தேதி திறக்கப்படும் என்று தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. இதையொட்டி, கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டன. 7 நாட்களில் 5.50 லட்சம் மந்திரங்கள் ஓதப்பட்டன. கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய பால ராமர் சிலை கடந்த 19-ம் தேதி கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.
இதற்கிடையே, பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக, 11 நாள் விரதத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி தொடங்கினார். தமிழகத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராமாயணம் தொடர்புடைய பல்வேறு புனித தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. பிரதமர் மோடி காலை 10.30 மணி அளவில் அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோயில் வளாகத்துக்கு வந்தார்.
பகல் 12.10 மணி அளவில் பால ராமருக்கான வஸ்திரம், வெள்ளி குடை ஆகியவற்றை தாம்பாளத்தில் ஏந்தியபடி கோயிலுக்குள் நுழைந்தார். கோயில் கருவறைக்குள் சென்று சங்கல்ப பூஜை செய்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோரும் பூஜையில் பங்கேற்றனர். வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி அனைத்து பூஜை, வழிபாடுகளையும் செய்தார்.
மதியம் 12.29 மணி முதல் 12.45 மணிக்குள் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, பால ராமரின் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். இதன்பிறகு சுவாமி கோவிந்த் தேவ் வழங்கிய புனித நீரை பருகிய பிரதமர் மோடி, 11 நாள் விரதத்தை நிறைவு செய்தார்.
ஒளிமயமான எதிர்காலம்: பிரதிஷ்டை நிகழ்வை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பகவான் ராமர் இருக்கிறார். ஆனால் அவருக்கு கோயில் கட்ட பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழல் எழுந்தது. இந்த நேரத்தில் இந்திய நீதித் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் கட்ட பல்வேறு தியாகங்களை செய்த கரசேவகர்கள், துறவிகளுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். பல நூற்றாண்டு பொறுமை, தியாகம், தவத்தின் பயனாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பால ராமர் இனிமேல் கூடாரத்தில் இருக்க தேவையில்லை. அவர் இப்போது புதிய கோயிலில் வாழ்கிறார்.
‘‘என்னை மன்னித்துவிடுங்கள்' என்று பகவான் ராமரிடம் வேண்டிக் கொள்கிறேன். கடந்த காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நமது முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கருதுகிறேன். ஏதோ ஒரு குறையால் நம் கனவு நிறைவேறாமலே இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு,அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டி முடித்துவிட்டோம். அடுத்து, பாரதத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். வலுவான, வளமான, ஆன்மிக பூமியாக பாரதத்தை கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த 21-ம் தேதி மலர்தூவி வழிபாடு நடத்தினேன். அதுமுதல் ஒளிமயமான காலம் தொடங்கிவிட்டதாக கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
அயோத்தி ராமர் கோயில் வளாகம் சுமார் 72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 2.7 ஏக்கரில் நாகரா கட்டுமான கலையில் 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம் என 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.