இந்தியா

கோடரியால் சிறுத்தைப்புலியை கொன்ற 56 வயது பெண்

செய்திப்பிரிவு

உத்தராகண்ட் மாநிலத்தில் 56 வயது பெண் ஒருவர் தன்னைத் தாக்கவந்த சிறுத்தைப் புலியை கோடரி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொன்றார்.

ருத்ரபிரயாக் மாவட்டம், கோட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கமலாதேவி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வயலில் நீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் வனப்பகுதியில் இருந்து தப்பிவந்த சிறுத்தைப்புலி ஒன்று அவரை தாக்க வந்துள்ளது.

இதைக் கண்டு அஞ்சி ஓடாமல் தனது கையில் இருந்த கோடரி மற்றும் அரிவாளைக் கொண்டு அதை எதிர்த்துப் போராடி, இறுதியில் வெட்டிக்கொன்றார். இதில் படுகாயமடைந்த கமலா தேவி தற்போது ஸ்ரீநகர், கார்வால் பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கமலா தேவி கூறும்போது, “முதலில் நான் பயந்தேன். பிறகு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அதனுடன் சண்டையிட்டேன். இன்று எனக்கு இறுதிநாள் அல்ல என்று எனக்கு நானே உறுதி எடுத்துக்கொண்டு அதனுடன் போராடினேன்” என்றார்.

முந்தைய சம்பவம்

இம்மாநிலத்தில் இதற்கு முன் கடந்த 2009-ல் பிரியன்ஷு ஜோஷி என்கிற 6-ம் வகுப்பு மாணவன் தனது சகோதரி பிரியாங்காவை காப்பாற்றுவதற்காக சிறுத்தைப் புலியுடன் வெறுங்கைகளுடன் சண்டையிட்டுள்ளார். டேராடூனைச் சேர்ந்த அண்ணன் தங்கை இருவரும் காலை 7 மணியளவில் பிரேம்நகர் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பிரியங்காவை திடீரென சிறுத்தைப்புலி தாக்கியது. அருகில் சென்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர். உதவிக்கு யாரும் வரவில்லை.

இந்நிலையில் பிரியன்ஷு பாயந்து சென்று சிறுத்தைப்புலியை பின்புறமாக இறுக கட்டிப்பிடித்துள்ளார். சிறுத்தைப்புலி பிரியங்காவை விட்டு விட்டு பிரியன்ஷுவை தாக்கத் தொடங்கியது.

அப்போது அவ்வழியே பள்ளிப் பேருந்து வந்ததால் சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடி விட்டது. சிறுத்தைப்புலி தாக்கியதில் அண்ணன் தங்கை இருவரும் காயமடைந்தனர். பிரியன்ஷுவுக்கு வீரதீர செயலுக்கான தேசிய விருது குடியரசுத் தலைவரால் 2011, ஜனவரி 26-ம் தேதி வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT