தீப்பிடித்தால் அணைக்கும் முக்கியப் பொருளாக இருக்கும் மணலுக்கு பதிலாக, ரொட்டி மாவு வைத்துக் கொள்கிறோம் என்று மும்பையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அமைப்பு மும்பை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் கமலா மில்ஸ் வளாகத்தில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது அதில் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து ஹோட்டல்களில் தீ தடுப்பு கருவிகளை பொருத்துவதிலும், தீ தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துவதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஹோட்டல்களில் உள்ள சமையல் அறையில் தீ தடுப்பு கருவிகளும், குறிப்பாக மணல் சேமித்து வைத்து இருக்க வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகிகளுக்கு தீ அணைப்பு அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.
ஆனால், சமையல் அறையில் தீ தடுப்பு பொருளாக மணலை வைப்பது என்பது இந்திய உணவு தரப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயல் என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.
இந்நிலையில், சமையல் அறையில் தீ பிடித்தால் அணைப்பதற்கு மணலைப் பயன்படுத்துவதற்கு பதிலாக ரொட்டி மாவை பயன்படுத்திக்கொள்கிறோம் என்று தீ அணைப்பு துறை அதிகாரிகளுக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் இந்தி ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அமைப்பு (எஎச்ஏஆர்) கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மும்பை மாநகராட்சி ஆணையர் அஜெய் மேத்தாவுக்கு கடந்த மாதம் 31-ம் தேதி இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ''ஹோட்டல் சமையல் அறையில் தீ அணைக்க பயன்படும் பொருளாக மணலை சேமிப்பது என்பது இந்திய உணவு தரக் கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு உகந்தது இல்லை. உணவில் மணல் சேர்ந்துவிடாமல் இருப்பதற்காக, மணலை தீ அணைக்கும் பொருளாக பயன்படுத்துவதற்கு பதிலாக ரொட்டி மாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் சமையல் அறையில் ரொட்டி மாவு எப்போதும் இருப்பு இருந்துகொண்டே இருக்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர், தீயணைப்பு அதிகாரிகளின் கருத்துகளைக் கேட்டு அதன்பின் முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை ஐஐடி கல்வி நிறுவனத்தின் தீக்காயம் தடுப்பு அமைப்பின் இயக்குநர் சுனில் கேஸ்வானி கூறுகையில், ''தீ அணைக்க ரொட்டி மாவை பயன்படுத்துவது என்பது முட்டாள்தனம். இதுவரை எங்கும் கேள்விப்படாதது. தீப்பிடித்து எரியும் போது மாவை அணைக்க பயன்படுத்தினால், அதனால், தீ கட்டுப்படாது, புதிதாக வாயுக்கள் உருவாகும். ஆனால், எண்ணெய் மூலம் பிடிக்கும் தீ விபத்துக்களை அணைக்க மணலுக்கு பதிலாக ரொட்டி மாவைப் பயன்படுத்தலாம்'' எனத் தெரிவித்தார்.