பெங்களூரு: வரும் 22ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தான் அயோத்தி செல்ல உள்ளதாக முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அயோத்தி ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அழைப்பை ஏற்று நான், எனது மனைவி, எனது மகன் குமாரசாமியின் மனைவி, குமாரசாமியின் மகன் நிகில் ஆகியோர் அயோத்தி செல்ல இருக்கிறோம். எங்கள் குடும்பத்தினர் செல்வதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா மாட்டேனா என்ற கேள்வியே கிடையாது. நிச்சயம் நான் போட்டியிடுவேன்" என தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று அயோத்தி சென்றார். அயோத்தியில் உள்ள நேபாளி பாபா ஆசிரமத்துக்குச் சென்ற அவர், பின்னர் சரயு நதியில் படகு மூலம் சென்று ஆய்வு செய்தார். அயோத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச அமைச்சர் ஜெய்வீர் சிங், "அயோத்தி திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. ராமரை தரிசிக்க அயோத்திக்கு வர இருப்பவர்களை வரவேற்க அயோத்தி தயாராக இருக்கிறது" என தெரிவித்தார்.
டெல்லியில் கான் மார்க்கெட் பகுதியில் உள்ள கோபால் கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பின்னர் அங்கு நடைபெற்ற ராம பஜனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல்களைப் பாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனவரி 22-க்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் தனது பிறந்த இடத்துக்கு திரும்ப இருக்கிறார். சிறப்பு வாய்ந்த இந்த தருணத்தில் நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் நான் எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டார்.
ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை ஏற்பாடுகள் சாஸ்த்திரப்படி நடைபெறவில்லை என்ற சங்கராச்சாரியர்களின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி, "சங்கராச்சாரியார்கள் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு நான் உரியவர் அல்ல. ஆனால், அவர்கள் அயோத்தி ராமர் கோயில் பிரான பிரதிஷ்டை விழாவுக்கு வர வேண்டும்; தங்கள் ஆசீர்வாதங்களை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என தெரிவித்தார்.
இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதற்கு சிபிஎம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஓர் அரசு, எந்த மதத்தின் பக்கமும் சாயக் கூடாது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதேபோல், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் யார் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களுக்கு அழைப்பு விடுக்க அவர்கள் யார்? ராமர் கோயிலுக்குச் செல்ல யாராவது அழைப்பு விடுக்க வேண்டுமா? நான் தொழுகைக்குச் செல்கிறேன். அதற்காக எனக்கு யாரும் அழைப்பு விடுப்பார்களா? பகவான் ராமர் எல்லோருக்குமானவர்" என தெரிவித்துள்ளார்.