இந்தியா

ராமர் கோயில் திறப்பு விழா | இலவச விஐபி நுழைவுச் சீட்டு குறித்த போலி மெசேஜ்: வாட்ஸ்அப் மோசடி

செய்திப்பிரிவு

சென்னை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வாட்ஸ்அப்பில் இலவச விஐபி நுழைவுச் சீட்டு குறித்த போலி மெசேஜ் வலம் வந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை எக்ஸ் தளத்தில் பயனர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையையும் வழங்கி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் சுமார் 6,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க இலவச விஐபி நுழைவுச் சீட்டு குறித்த போலி மெசேஜ் வாட்ஸ்அப் தளத்தில் பயனர்கள் சிலருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த மெசேஜில் உங்களது விஐபி நுழைவுச் சீட்டை பெற மொபைல்போன் செயலி ஒன்றை இன்ஸ்டால் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி செய்வதன் மூலம் அரசு தரப்பிலோ அல்லது அறக்கட்டளை தரப்பில் விஐபி நுழைவுச் சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரமார் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் நேரடியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த போலி செய்தி மூலம் மொபைல்போன் பயனர்களின் தரவுகள் உளவு பார்க்க அல்லது களவாட வாய்ப்பு உள்ளதாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது சைபர் குற்ற ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல ராமர் கோயில் பிரசாதம் விற்பனை மேற்கொள்ளப்படுவதாக சில வெப்சைட்கள் மூளைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பிரசாதம் பெற கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்த சைட்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

SCROLL FOR NEXT