இந்தியா

மோடியை சர்வாதிகாரி என்று வர்ணித்த சந்திரசேகர ராவ்: வெங்கைய நாயுடு கண்டனம்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியை 'பாசிஸ்ட்' என்று வர்ணித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு பாஜக தலைவர் வெங்கைய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெங்கைய நாயுடு, சந்திரசேகர ராவ் உடனடியாக மோடி மீதான இந்த அவதூறுக் கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐதராபாத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஆளுநருக்கு அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சர்வாதிகாரத்தனமான முடிவு என்று வர்ணித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த வெங்கைய நாயுடு, "ராவ் பாசிசத்திற்கு புதிய விளக்கம் அளிக்கிறார். ஜனநாயகத்திற்கு விரோதமான அணுகுமுறையே பாசிசம் ஆகும். நாடாளுமன்றத்தினால் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பாசிசம் ஆகாது” என்றார்.

மேலும், ஆந்திர மாநில பிரிவினைச் சட்டம் ஆளுநருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது என்று கூறிய வெங்கைய நாயுடு, “முந்தைய ஆட்சி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததை ராவ் அறிவாரா இல்லையா? மசோதா நிறைவேற்றத்தைக் கொண்டாடியவர்கள் அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பது பற்றியும் அறிவது அவசியம்” என்றார்.

மாநில அரசு மத்திய அரசின் முடிவுகளுக்குக் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அவர் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியல் நாட்டைச் சேதப்படுத்தி விட்டது என்று சாடினார்.

SCROLL FOR NEXT