மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா அணியில் இணைந்துள்ளார் மிலிந்த் தியோரா. இந்நிலையில், அவர் எக்ஸ் தளத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது.
“நான் ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனாவில் இணைந்தேன் என்பதை என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு சில துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் நான் தெரிவித்தேன். ஆனால், அது கேட்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் 20 ஆண்டு காலம் பணியாற்றி உள்ளேன். எனது குடும்பம் 55 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்துள்ளது. எப்போதும் மும்பை, மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் இந்திய தேசத்தின் நலனுக்காகவே நான் பணியாற்ற விரும்புகிறேன்.
தேநீர் விற்றவர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர், ஆட்டோ ஓட்டுநர் முதல்வர் நாட்டின் இரண்டாவது பெரிய மாநிலத்தின் முதல்வர். இந்த மாற்றம் இந்திய அரசியலை வளப்படுத்துகிறது. அனைவரும் அணுகக்கூடிய மற்றும் கடினமாக உழைக்க கூடியவர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. பின்தங்கிய மக்களின் வாழ்வு குறித்த புரிதல் மற்றும் மாநில வளர்ச்சி சார்ந்து அவர் முன்னெடுக்கும் திட்டங்கள் பாராட்டத்தக்கது. அவரது தொலைநோக்கு திட்டம் மற்றும் நோக்கம் என்னை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அது சார்ந்து அவர் மேற்கொள்ளும் முயற்சிக்கு நான் ஆதரவளிக்க உள்ளேன். மேலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நோக்கம் மற்றும் பார்வை என்ன ஈர்த்துள்ளது. ஆக்கபூர்வமான சிந்தனைக்கு மதிப்பளித்து இயங்கும் தலைவருடன் இயங்கவே விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.