எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கக்கூடிய பிருத்வி பாதுகாப்பு ஏவுகணை (பி.டி.வி.) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது.
120 கி.மீ. உயரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம், பலசூரிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள வீலர் தீவிலிருந்து இந்த ஏவுகணையை முதல் முறையாக விண்ணில் ஏவி விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.
வீலர் தீவிலிருந்து 2000 கி.மீ தூரத்தில் வங்கக் கடலில் கப்பல் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.07 மணிக்கு வேறொரு ரக ஏவுகணை (பிருத்வி பாதுகாப்பு ஏவுகணைக்கான இலக்கு) விண்ணில் ஏவப்பட்டது.
அதைப் பற்றிய தகவலை ராடார் உதவியுடன் அறிந்தவுடன், கணினி கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த உத்தரவின்படி தானியங்கி முறையில் பிருத்வி பாதுகாப்பு ஏவுகணை, வீலர் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு பாய்ந்து சென்றது. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் இலக்கை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது.