கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதனால் பெங்களூர் மட்டுமில்லாமல் ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் உள்ள 'விப்ஜியார்' தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்த 6 வயது சிறுமி, கடந்த ஜூலை 2-ம் தேதி அப்பள்ளியிலேயே பலாத்காரம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேலும் 2 பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி, கன்னியாஸ்திரி, ஆசிரியை என பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இதனைக் கண்டித்து கடந்த ஒரு மாதமாக பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கன்னட சலுவளி கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை பெங்களூரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதையடுத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரில் உள்ள 90 சதவீத கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்கவில்லை. பெரும்பாலான தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு
இந்த முழு அடைப்புக்கு அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்காததால் அரசு பேருந்துகள், அரசு பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. கே.ஆர்.மார்க்கெட், சிவாஜி நகர் ரசல் மார்க்கெட், யஷ்வந்த்நகர் மார்க்கெட் ஆகிய நகரின் முக்கிய சந்தைகளும் திறந்திருந்தன. காந்திநகர் பகுதியில் திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர்.
அதேபோல சில மருந்தகங்களை மூடச்சொல்லியதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதனிடையே பெங்களூர்-ஒசூர் சாலையிலுள் ஹெப்பக்குடி என்ற இடத்திலும், டேனரி சாலை என்ற இடத்திலும் இரு அரசு பேருந்துகள் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். பெங்களூர் மாநகரம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் முழு அடைப்பு அமைதியாகவே நடந்தது.
இதனிடையே 500-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் டவுன் ஹால் அருகே பாலியல் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் தங்களது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கோரி கோஷங்களை எழுப்பினர். பேரணியாக சென்ற கன்னட அமைப்பினர் மைசூர் வங்கி சதுக்கம், சுதந்திர பூங்கா வழியாக முதல்வர் சித்தராமய்யாவின் வீட்டை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
குண்டர் சட்டத்தில் கைது?
அப்போது கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்புகளின் தலைவர்கள் சித்தராமய்யாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``பொதுமக்கள் முழு அடைப்புக்கு தங்களின் முழு ஆதரவை தெரிவித்ததன் மூலம், எங்களது கோரிக்கை வெற்றிபெற்றிருக்கிறது. தொடரும் பலாத்கார சம்பவங்களால் கர்நாடகாவிற்கு கெட்டப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றங்களை குறைக்க வேண்டும். அதேபோல பெல்காமில் கன்னடர்களை தாக்கும் மராட்டியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும்போது, "பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும். தொடரும் பலாத்கார சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து உடனடியாக உயர்மட்டக் குழு அமைக்கப்படும்" என்றார்.