சண்டிகர்: ஹரியாணாவில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரூ.5 கோடி, 5 கிலோ தங்கம், 5 வெளிநாட்டு துப்பாக்கிகள், 300 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹரியாணாவில் சுரங்க தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதன்படி காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தில்பக் சிங்கின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. போக்குவரத்து, சுரங்கம், பிளைவுட் உள்ளிட்ட தொழில்களை அவர் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: முன்னாள் எம்எல்ஏ தில்பக் சிங்வீட்டில் சோதனை நடத்தியபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கின. இதன் மொத்த மதிப்புரூ.5 கோடி. அதோடு தங்க பிஸ்கட்கள் உட்பட 5 கிலோ தங்கமும் பிடிபட்டது. வெளிநாடுகளில் தில்பக் சிங் பல்வேறு சொத்துகளை குவித்துள்ளார். இதுதொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன.
அவரது வீட்டில் இருந்து 5 வெளிநாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவருக்கும், ஹரியாணாவின் பிரபல தாதா காலா ராணாவுக்கும் இடையே முன்பகை இருக்கிறது. இருதரப்புக்கும் இடையேபலமுறை துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கிகளை வைத்திருந்தாகவும் அவற்றுக்கு உரிமம் இருப்பதாகவும் தில்பக் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.