இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்புள்ள இடைத்தரகர் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி வக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 2011-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உட்பட 14 பேரை அமலாக்கத் துறை ஏற்கெனவே கைது செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த சம்மன்அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி, அதனை சோரன் ஏற்க மறுத்தார்.

இந்நிலையில் அமலாக்கத் துறை கடைசி வாய்ப்பாக கடந்த 29-ம் தேதி 7-வது முறையாக ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து அமலாக்கத்துறைக்கு சோரன் அனுப்பிய கடிதத்தில் விசாரணை பாரபட்சமாக நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். விசாரணைக்கு ஆஜராவதற்கான விருப்பமோ அல்லது கால அவகாச கோரிக்கையோ அதில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் தொடர்புடைய சுரங்க முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் ஊடக ஆலோசகர் அபிஷேக் பிரசாத்தின் வீடு, ஹசாரிபாக் நகரில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திர துபேவின் வீடு, சாகிப்கஞ்ச் நகரில் மாவட்ட ஆட்சியர் ராம் நிவாஸுக்கு சொந்தமான இடங்கள், ராஜஸ்தானில் இவரது சொந்த ஊரில் உள்ள வீடு ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது.

மேலும் சட்டவிரோத ஒப்பந்தத்தில் தொடர்புடைய பல்வேறு இடைத்தரகர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

SCROLL FOR NEXT