புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக 'கிரவுட் பண்டிங்' மூலம் நிதி திரட்டும் திட்டத்தை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் அறிவித்தது. தேசத்திற்காக நன்கொடை கொடுங்கள் (டொனேட் ஃபார் தேஷ்) என்ற பெயரிலான காங்கிரஸின் பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார்.
நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக கடந்த 1920-ம்ஆண்டு ‘திலக் ஸ்வராஜ் ஃபண்ட்’என்ற பெயரில் நிதி திரட்டும் திட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தார். இத்திட்டத்தில் இருந்து உத்வேகம் பெற்று தேசத்திற்கான நன்கொடை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 138-ன் மடங்குகளில் (ரூ.138, ரூ.1380, ரூ.13,800…) நன்கொடை வழங்குமாறு பொதுமக்களிடம் அக்கட்சி கேட்டுக்கொண்டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “தேசத்துக்காக மக்களிடம் காங்கிரஸ் நன்கொடை கேட்பது இதுவே முதல்முறை. பணக்காரர்களை மட்டுமே நம்பி செயல்பட்டால் அவர்களின் கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும். மகாத்மா காந்தியும் சுதந்திரப் போராட்டத்தின் போது பொதுமக்களிடம் நன்கொடை பெற்றார்” என்றார்.
இந்நிலையில் தேசத்திற்கான நன்கொடை பிரச்சாரத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி இதுவரை ரூ.10.15 கோடி நிதி வசூலித்துள்ளது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் அஜ்ய் மாக்கன் அறிவித்துள்ளார்.