இந்தியா

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் செப்.20-ல் தீர்ப்பு

செய்திப்பிரிவு

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை இன்று (வியாழக்கிழமை வெளியிட்ட பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா, தீர்ப்பு நாளன்று ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இறுதிவாதம் முடிந்த நிலையில், செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா அறிவித்தார்.

அத்துடன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தீர்ப்பு நாளன்று ஆஜராக வேண்டும் என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் அதிருப்தி

முன்னதாக, இவ்வழக்கில் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் தரப்பு இறுதிவாதமும் ஏற்கெனவே முடிந்துவிட்டது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமாரை இறுதி தொகுப்புரை வழங்குமாறு நீதிபதி டி'குன்ஹா கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, புதன்கிழமை காலை 11.30 மணி வரை வழக்கறிஞர் பி.குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனிடையே நீதிமன்றத்துக்கு வந்த அவரது உதவியாளர் அசோகன், "எங்கள் வழக்கறிஞருக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தொடர்பான பணிகள் உள்ளன. அதனால் இன்று வரமுடியவில்லை. எனவே வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்க வேண்டும்'' என்றார்.

இதனால் கடும் கோபமடைந்த நீதிபதி டி'குன்ஹா, "18 ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், வாக்கு மூலம் பதிவு செய்தல், குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் விளக்கம் பெறுதல், இறுதிவாதம் எல்லாம் முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் இறுதிவாதத்தின் போது 42 நாட்கள் கால அவகாசம் கொடுத்தேன்.

தற்போது இவ்வழக்கில் இறுதி தொகுப்புரை வழங்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பது சரியல்ல. வழக்கை மேலும் தாமதம் செய்ய முயற்சித்தால் இறுதி தொகுப்பு வழங்கும் வாய்ப்பை மறுத்து தீர்ப்பின் தேதியை அறிவித்துவிடுவேன். மாலை 5 மணி வரை நான் நீதிமன்றத்தில் இருப்பேன். அதற்குள் இறுதி தொகுப்புரை வழங்கப்பட வேண்டும்" என்றார்.

இதையடுத்து நீதிபதி, அரசுத் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, "குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பிறகு வாதிடுவார்கள். நீங்கள் உங்களுடைய இறுதி தொகுப்புரையை வழங்குங்கள்'' என்றார்.

இதற்கு அரசு உதவி வழக்கறிஞர் முருகேஷ் எஸ்.மரடி, "அரசு வழக் கறிஞர் பவானி சிங் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராகியுள்ளார். மேலும் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களின் இறுதி தொகுப்புரை முடிந்த பிறகே அரசுத் தரப்பில் இறுதி தொகுப்புரை வழங்க வேண்டும்" என்றார். இதையடுத்து நீதிபதி டி'குன்ஹா வ‌ழக்கை புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைத்தார்.

வழக்கு பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்த போதும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை.அவருக்கு பதிலாக ஆஜரான வழக்கறிஞர் அசோகன், "கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்'' என கோரினார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி டி'குன்ஹா, "வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கிறேன். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகி இறுதி தொகுப்புரை வழங்க வேண்டும். இல்லாவிடிவில் இறுதி தீர்ப்பின் தேதியை அறிவிப்பேன்" என்றார்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று ஜெயலலிதா தரப்பில் இறுதி தொகுப்புரை வழங்கப்பட்டதை அடுத்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT