இந்தியா

பாலிவுட் நடிகை ஜீனத் அமன் போலீஸில் பாலியல் அத்துமீறல் புகார்

ஏஎன்ஐ

பாலிவுட் முன்னாள் நடிகை ஜீனத் அமன் தனக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஜீனத் அமன். அவருக்காகவே பல திரைப்படங்கள் பல நாட்களுக்கு ஓடிய காலமும் உண்டு.

இந்நிலையில், அண்மையில் அவர் மும்பை ஜுஹூ போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தனக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் பெண்ணை பின் தொடர்தல் (சட்டப்பிரிவு 304 டி), பெண்ணின் மாண்பைக் கெடுக்கும் வகையில் செயல்படுதல் (சட்டப்பிரிவி 509) ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "ஜீனத் அமனுக்கும் அவர் புகார் கொடுத்துள்ள தொழிலதிபருக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்துள்ளது. ஆனால், நட்பு கசந்துபோகவே ஜீனத் அவரிடமிருந்து விலகியுள்ளார். ஆனால், அந்த தொழிலதிபரோ தொடர்ந்து ஜீனத்துக்கு தொலைபேசி வாயிலாக துன்புறுத்தல் அளித்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகவே ஜீனத் புகார் அளித்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT