ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாட்டின் 69-வது குடியரசு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் இன்றைய குடியரசு தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற சந்திரபாபு நாயுடு நாடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து அபுதாபிக்கு அவர் முதலில் வந்தடைந்தார். அபுதாபியில் இருந்து ஹைதராபாத்துக்கு அவர் வருவதாக இருந்தது. ஆனால், அபுதாபியில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் விமானம் மிகவும் தாமதமாக புறப்பட்டது. இதனால், விஜயவாடாவுக்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்திலிருந்து 9 மணி நேரம் தாமதமாக அவர் அங்கு வந்தடைகிறார்.
அதாவது இன்று காலை 7 மணிக்கு வந்து சேர வேண்டியவர் மாலை மணிக்கே வருகிறார். இதனால், அவரால் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
முதல்வர் சந்திரப்பாபு நாயுடுவின் இல்லத்தில் நடந்த குடியரசு தின விழாவில் சந்திரபாபுவுக்குப் பதிலாக அவரது மனைவி தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்திரா காந்தி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின விழாவில் ஆந்திரா மட்டும் தெலங்கானா ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் கலந்து கொண்டார்.