ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை உடனடியாக செயல்பட்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
ஹைதராபாத்தின் மெஹ்திபட்டினம் அருகே உள்ள ஜோதிநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று (டிச. 23) மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற தளங்களிலும் பரவத் தொடங்கியதால் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு 15 நிமிடங்களிலேயே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட தளங்களில் இருந்த நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனையின் மாடியில் இருந்த எல்இடி விளக்குகளில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீவிபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.