புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், “நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின்போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண பானர்ஜி என்னை போல மிமிக்ரி செய்து காட்டியது முட்டாள்தனமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட சில மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போல நடித்துக் (மிமிக்ரி) காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஜகதீப் தன்கரை போல திரிணமூல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். "அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி (மிமிக்ரி) செய்யும் எம்.பியை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் வீடியோ எடுக்கிறார். இது முட்டாள்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று தெரிவித்துள்ளார்.