விமான நிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழிலகப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் உடையில் வரும் மார்ச் மாதத்துக்குள் கேமரா பொருத்தப்படவுள்ளது. பயணிகளைக் கண்காணிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிலுள்ள 59 விமானநிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் விமான நிலையத்தில் பணியாற்றும் சிஐஎஸ்எப் வீரர்கள், தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை எளிதில் அறிந்துகொள்ளவும், கண்காணிக்கவும் முடியும். இந்த சிறிய வகையிலான கேமராக்கள் சிஐஎஸ்எப் வீரர்களின் உடையில் பொருத்தப்படும். குறிப்பாக அவர்களது தோள்பட்டையில் இந்த கேமரா பொருத்தப்படும். இந்த கேமராக்கள் மிகவும் துல்லியமாக வீடியோக்களையும், ஆடியோக்களையும் பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயணிகளை சோதனையிடும்போது இந்த கேமராக்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். இதன் விலை ரூ.60 ஆயிரம் ஆகும். மொத்தம் ரூ.3 கோடி செலவில் 500 கேமராக்கள் முதலில் வாங்கப்படவுள்ளன. இதற்கான முயற்சிகளை சிஐஎஸ்எப் இயக்குநர் ஜெனரல் ஓ.பி. சிங் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சிஐஎஸ்எப் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹேமேந்திர சிங் கூறும்போது, “இதுதொடர்பாக உத்தரபிரதேச போலீஸ் டிஜிபியுடன், சிஐஎஸ்எப் டிஜிபி ஓ.பி.சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சில நேரங்களில் சிஐஎஸ்எப் வீரர்களுடன் பயணிகள் தேவையில்லாமல் விவாதம் செய்து பிரச்சினையை ஏற்படுத்துவார்கள். அவர்களை சோதனை செய்யும்போது, சில பயணிகள் கெட்ட வார்த்தைகளால் சிஐஎஸ்எப் வீரர்களை திட்டி கீழ்த்தரமாக நடந்துகொள்வார்கள். அதுபோன்ற நேரங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய இந்த கேமராக்கள் நமக்கு உதவி செய்யும்.
சிஐஎஸ்எப் வீரர்கள் மீது புகார் வரும்போது இந்த கேமராவில் பதிவான காட்சி, ஒலியைக் கொண்டு யார் மீது தவறு என்பதை நிரூபிக்க முடியும். இனிமேல் கேமரா உதவியுடன் சிஐஎஸ்எப் அதிகாரிகள் தங்களது கடமையை பயமில்லாமலும், தடையில்லாமலும் செய்ய முடியும். கேமராக்களை வாங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வரும் மார்ச்சுக்குள் இந்தப் பணிகள் முடியும்.
மும்பை, டெல்லி விமானநிலையங்களில் சோதனை அடிப்படையில் கேமராக்களைப் பயன்படுத்தினோம். இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து 59 விமான நிலையங்களில் செயல்படுத்தவுள்ளோம்” என்றார்.