முத்தலாக் தடை சட்ட மசோதாவை அவசர கதியில் நிறைவேற்ற முயலக்கூடாது, அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என திமுக மாநிலங்களை எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை மசோதா அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் கொண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி கூறியதாவது:
"மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்ட மசோதாவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனை நாடாளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்ட பிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்பட வேண்டும். இதனை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்" எனக்கூறினார்.
இதுபோலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவும், முத்தலாக் சட்ட மசோதாவை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு முதலில் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.