உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியில் வீசிய புழுதிப் புயலில், ஒரு திருமண மண்டபத்தின் மேற்கூரையோடு சேர்த்து தொழிலாளி ஒருவர் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயலால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வடஇந்திய மாநிலங்களில் கோடை காலத்தில் நிலங்கள் வறண்டு விடுகின்றன. இதனால் மண் பொடியாக மாறி காற்றில் கலக்கிறது. அதிக வெப்பத்தால் வலுவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது. மேலும் பாகிஸ்தான் மற்றும் தார் பாலைவனத்தில் இருந்து வீசும் வெப்பக் காற்று மணல், தூசியை வாரி இறைக்கிறது.
இதுபோன்ற காரணங்களால் வடஇந்திய மாநிலங்களில் மே, ஜூன் கோடை காலத்தில் புழுதிப் புயல்கள் உருவாகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் புழுதிப் புயல் வீசக்கூடும் என்று சில நாட்களுக்கு முன்பே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி மாலையில் உத்தர பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களில் புழுதிப் புயல் வீசியது. உத்தர பிரதேசத்தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. புழுதிப் புயலால் பிரயாக்ராஜ், பதோஹி, மிர்சாபூர், பதேபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 117 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
புழுதிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டு உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், சம்பவ இடங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழப்பு, பொருட்சேதம், பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
புழுதிப் புயல் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: புழுதிப் புயல் மற்றும் இடி, மின்னலுடன் கூடிய மழையால் மாநிலம் முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதிக அளவில் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் புயலால் உருக்குலைந்து உள்ளன. நூற்றுக்கணக்கான மரங்கள்,மின் கம்பங்கள் சரிந்து உள்ளன. ஏராளமான வீடுகள், கடைகள் சேதமடைந்து உள்ளன. வீடுகள், கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்துள்ளன.
பதோஹி பகுதி கங்கை நதியில் அமைக்கப்பட்டிருந்த மிதவை மேம்பாலம் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆடு, மாடுகள் உட்பட நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மரங்கள் விழுந்து நூற்றுக்கணக்கான கார்கள் நாசமாகி உள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது.
புழுதிப் புயலால் சுமார் 30 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. நூற்றுக்கணக்கான கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியை சேர்ந்த தொழிலாளி நான்கி மியான் (50). இவர் 13-ம் தேதி மாலை அங்குள்ள திருமண மண்டபத்தின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த காற்று வீசியது.
திருமண மண்டப மாடியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் இரும்புக் கம்பியை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால், காற்றின் வேகத்தால் மேற்கூரை பெயர்ந்து பறந்தது. அதோடு தொழிலாளி நான்கி மியானும் சுமார் 50 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். தரையில் விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “காற்றின் வேகத்தில் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டேன். சுமார் 50 அடி உயரத்தில் பறந்து தொலைவில் விழுந்தேன். நான் தூக்கி வீசப்பட்டதை யாரோ செல்போனில் படம் பிடித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
தொழிலாளி தூக்கி வீசப்பட்ட வீடியோவை பதிவு செய்த இளைஞர் ராஜன் அன்சாரி கூறும்போது, “எனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தேன். திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது எங்கள் வீட்டின் கான்கிரீட் சுவரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அப்போது, ஒருவர் சுமார் 50 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டார். இதை செல்போனில் வீடியோ எடுத்தேன்’’ என்று தெரிவித்தார்.