தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத்தை (வயது64) நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. இவர் வரும் 23-ம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.
இப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் அக்சல் குமார் ஜோதியின் பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1977-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஓம் பிரகாஷ் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
ஓம் பிரகாஷ் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர். தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்கும் முன், கனரக அமைச்சகம், பொதுத்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், அதற்கு முன் பாதுகாப்பு துறையில் இயக்குநராகவும் ஓம் பிரகாஷ் இருந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கான தடை முடிந்தபின் 1994-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஐ.நா.வின் தேர்தல் பார்வையாளராகவும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதன்மைச் செயலாளராகவும் ஓம் பிரகாஷ் இருந்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு இவரின் பணியைப் பாராட்டி பிரதமர் விருதும் வழங்கப்பட்டது.
இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டதையடுத்து, காலியாக இருக்கும் தேர்தல் ஆணையர் பதவிக்கு முன்னாள் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையர் அல்லது தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகள் அல்லது, 65 வயதாகும். இதில் எது முதலில் வருகிறதோ அத்துடன் ஓய்வு பெறுவார்கள்.