காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலியாக, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ரம்ஜான் பண்டிகையில் வழக்கமான உற்சாகம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைக்கான அனைத்து மகிழ்ச்சியுடனும் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வந்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காஸாவில் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, மனிதநேயத்தை காத்திட வழிவகுக்க வேண்டும் என்ற குரலும் எழுப்பப்பட்டது.
டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த தொழுகைக்குப் பின்னர், காஸாவில் நடைபெறும் தாக்குதலை மையப்படுத்தி பேனர்களை கையில் ஏந்திய வண்ணம் இஸ்லாமியர்கள் நின்றனர். இன்று தங்களது துவா மனிதநேயம் காக்கப்பட வேண்டும் என்பதே என உணர்த்துவதாக இருந்தது அவர்கள் ஏந்தி நின்ற பேனர்கள்.
"பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல், தங்கள் மீதான தாக்குதல்" என சகோதரத்துவ கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில், அந்த பேனர்களில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் அமைந்திருந்தன. இஸ்ரேலின் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவற்றில் எழுதப்பட்டிருந்தது.
பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த 21 நாட்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் புரடக்டிவ் எட்ஜ் என்ற பெயரில் இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவே இத்தாக்குதல் நடைபெறுகிறது என இஸ்ரேல் கூறி வந்தாலும், போரில் அப்பாவி பொதுமக்களே அதிகம் பேர் பலியாகியிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தப் போரில் பலியானவர்கள் எண்ணிக்கை பாலஸ்தீனத்தில் 1030-ஆக உள்ளது. இஸ்ரேல் தரப்பில் 46 ஆக உள்ளது. இவர்களில் 43 பேர் இஸ்ரேல் ரணுவத்தினராவர்.
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்துமே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கே வழிவகுக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவரும் தெரிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.