இந்தியா

பஜன்லால் சர்மா: ஆர்எஸ்எஸ் தொண்டர் டு ராஜஸ்தான் முதல்வர்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா நேற்று பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வர்களாக தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் பதவியேற்றனர். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மறைவு காரணமாக அங்கு வாக்குப் பதிவுநிறுத்தப்பட்டது. எனவே, 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 3–ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 69 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

பாஜக வெற்றியை தொடர்ந்து முதல்வரை தேர்வு செய்வதில் ஒரு வாரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டது. வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங்ஷெகாவத், அர்ஜுன்ராம் மெக்வால் உள்ளிட்ட தலைவர்கள் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். இந்நிலையில் அதிகம் அறியப்படாத கட்சியின் பொதுச் செயலாளர் பஜன்லால் சர்மாவை முதல்வராக தேர்வுசெய்து பாஜக வியப்பை ஏற்படுத்தியது. முதல்முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மா ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்றவர்.

ஜெய்ப்பூரில் கடந்த 12-ம் தேதி நடந்த பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜஸ்தான் புதிய அரசின் பதவியேற்பு விழா, ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஆல்பர்ட் அரங்கு முன்பு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

பிறந்தநாளில் பதவியேற்பு: பஜன்லால் சர்மா தனது 57-வது பிறந்த நாளில் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருடன் துணை முதல்வர்களாக தியா குமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோரும் பதவியேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட், வசுந்தரா ராஜே மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்த வார தொடக்கத்தில் பாஜகபுதிய எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்பு புதிய எம்எல்ஏக்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் கடைசி வரிசையில் பஜன் லால் சர்மா இருந்தார். ஆனால் ஒரு மணி நேரம் கழித்து, ராஜஸ்தான் சட்டப்பேரவை கட்சி தலைவராக அவர் அறிவிக்கப்பட்ட பிறகு, பஜன்லால் சர்மா முன் வரிசை மற்றும் மையப் பகுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

பிராமண சமூகத்தை சேர்ந்த பஜன்லால் சர்மா, பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த மாவட்டத்தில் முதன்முதலாக ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்மா 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார்.

தீவிர ஆர்எஸ்எஸ் தொண்டரான இவர் அயோத்தி ராமர் கோயிலுக்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1992-ல் இதற்காக சிறைக்கு சென்றார்.

கடந்த 30 ஆண்டுகளாக பாஜக இளைஞர் அணி மற்றும் கட்சி அமைப்பில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

முதுகலை பட்டதாரி: அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற சர்மா விவசாயப் பொருட்கள் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் தொகுதியில் 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

பஜன்லால் சர்மா நேற்று பதவியேற்பு விழாவுக்கு புறப்படுவதற்கு முன்பு, மனைவியுடன் சேர்ந்து தனது பெற்றோருக்கு பாதபூஜை செய்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்றார்.

SCROLL FOR NEXT