இந்தியா

தெலங்கானா தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றிப்பெற்ற முன்னாள் பெண் மாவோயிஸ்ட் அமைச்சரானார்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: மாவோயிஸ்டாக இருந்து மனம்மாறி, 20 ஆண்டு காலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பழங்குடியின பெண்ணை தெலங்கானா மக்கள் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக்கியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் முலுகு அருகே உள்ள ஜக்கன்ன பேட்டை கிராமத்தில், ஆதிவாசி குடும்பத்தில் பிறந்தவர் அனுசூய சீதக்கா (52). இவர் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தார். பழங்குடியின மக்களின் உரிமைக்காவும் சிறு வயது முதலே குரல் கொடுத்து வந்தா சீதக்கா கடந்த 1988-ம் ஆண்டு நக்ஸலைட் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். சுமார் 15 ஆண்டுகள் வரை வனப்பகுதிகளில் மறைந்திருந்து தமது இனத்திற்காக குரல் கொடுத்து வந்தார். மவோயிஸ்ட்டாக இருந்த ஸ்ரீராமுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், என்.டி.ராமாராவ் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த போது, மாவோயிஸ்ட்கள் மனம்மாறி மக்களோடு மக்களாக வாழ முன் வந்தால், பொது மன்னிப்பு அளிக்கப்படும் என அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து சீதக்கா 1997-ம்ஆண்டு, பொது மன்னிப்பு கேட்டு போலீஸாரிடம் சரண் அடைந்தார்.

மக்களோடு மக்களாக இணைந்த சீதக்கா, கடந்த 2001-ம் ஆண்டில், ஹைதராபாத்தில் சட்டம் படித்து, பி.எச்.டி ஆய்வும் முடித்து முனைவர் பட்டம் பெற்றார். இவர் அவர் வசிக்கும் பகுதியில் பல சமூக பிரச்சனைகளை எளிதாக கையாண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அரசியல் அரங்கேற்றம்: இதனை கவனித்த அப்போதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு, சீதக்காவை தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு அரசியல் அறிவியல் பாடத்தில் அவர் 2வது முறையாக முனைவர் பட்டம் பெற்றார். இதனிடையே கடந்த 2009-ம் ஆண்டு அவரது சொந்த ஊரான முலுகுவில் தெலுங்கு தேசம்கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2017ல் தற்போதைய தெலங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து சீதக்காவும் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகி, காங்கிரஸில் இணைந்தார். கரோனா சமயத்தில் சீதக்கா ஆதிவாசிகளுக்கு நேரில் சென்று உணவு, மருந்துகளை வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

அமைச்சரான சீதக்கா: கடந்த மாதம் நடந்து முடிந்ததெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் சீதக்கா மாபெரும் வெற்றி பெற்றார். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனி ஆட்சி அமைத்ததால், சீதக்காவை அமைச்சராக்கியது. பஞ்சாயத்து ராஜ் துறை, கிராமிய வளர்ச்சி துறை, பெண் மற்றும் சிசு நலத்துறை ஆகிய 3 துறைகளுக்கு சீதக்காவை அமைச்சராக அறிவித்தது. இதனை தொடர்ந்து, நேற்று தெலங்கானா சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் சீதக்கா.

மன உறுதியும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஜாதி, மத,பேதங்களை எல்லாம் உடைத்தெறிந்து, ஒரு மாவோயிஸ்ட்டும் அமைச்சர் ஆகலாம் என்பதை சீதக்கா நிருபித்துள்ளார்.

SCROLL FOR NEXT