போலாவரம் அணைக்கட்டு விவகாரம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியதை எதிர்த்து, சனிக்கிழமை தெலங்கானா மாநிலத்தில் பந்த் நடத்தப்பட்டது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தெலங்கானா, ஆந்திரம் என இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், இரு மாநில எல்லையில் உள்ள தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் போலாவரம் அணைக்கட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கீழ் மட்டத்தில் உள்ள 7 மண்டலங்களை அதாவது சுமார் 700 கிராமங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைக்க வகைசெய்யும் மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆளும் தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு சனிக்கிழமை முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தது. மேலும் இந்த பந்த்துக்கு இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. பந்த் காரணமாக தெலங்கானாவில் சுமார் 10 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
வங்கிகள், ஏ.டி.எம்.களும் இயங்காததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடைகள், வணிக வளாகங்கள் திரையரங்குகள், பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. ஹோட்டல்களும் டீக்கடைகளும் அடைக்கப்பட்டன. போலாவரம் திட்டத்துக்காக, சுமார் 700 கிராமங்களை ஆந்திர மாநிலத்துடன் இணைத்ததைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.