சாம்பல்பூர்: கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (டிச.12) மதியம் குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கியது.
இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பகுதியில் உள்ள லாரிபாலி கிராமத்தில் நடந்தது. 3 மணி அளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையின் அழுகுரலை மக்கள் கவனித்தனர். இந்த விவரத்தை அறிந்ததும் சம்பவ இடத்துக்கு உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் விரைந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் மருத்துவர்கள், தீயணைப்பு படையினர் மற்றும் நிலத்தை வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்தில் பள்ளம் எடுத்து குழந்தையை மீட்டுள்ளனர். இந்த பணியின் போது உள்ளே சிக்கி இருந்த குழந்தை அழும் சத்தம் வெளியில் கேட்டது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் 15 அல்லது 20 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்திருக்கலாம் என தகவல்.