புதுடெல்லி: ஒடிசா மாநிலத்திலுள்ள பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பால்டியோ சாகு குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர் களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் பகுதிகளிலும், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில் மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாகுவுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த புதன்கிழமை தொடங் கிய சோதனை 5 நாட்களாக நடை பெற்று வந்தது. தீரஜ் சாகு வீட்டில் ஏராளமான பணம் குவிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அலமாரி முழுவதும் கட்டுக்கட்டாக பணம் குவிந்திருந்தது.
இதையடுத்து 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பணம் எண்ணப்பட்டது. நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 அதிகாரிகள், 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் அங்கிருந்த தொகை கணக்கிடப்பட்டது. அவரது வீடு, அலுவலகத்திலிருந்து இதுவரை ரூ.35.35 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மொத்தம் 176 மூட்டைகளில் பணம் கொண்டு செல்லப்பட்டது. சோதனைக்கு உள்ளான பால்டியோ சாகு இன்பிரா நிறுவனமானது, மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுவுக்கு நெருக்கமான உறவினருடையது என்று தெரியவந்துள்ளது. இந்த நிறுவனம்தான் பவுத் டிஸ்டில்லரீஸ் என்ற தனியார் மதுபான ஆலையை நடத்தி வருகிறது.
அனுராக் தாக்குர் தாக்கு: காங்கிரஸ் எம்.பி. வீட்டில் ரூ.350 கோடி ரொக்கம் சிக்கியது குறித்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனுராக் தாக்குர் கூறியதாவது:
தொடக்கம் முதலே ஊழலில் திளைத்து வருவது காங்கிரஸ் கட்சிதான். ஊழலுக்கு ஆதரவாக இருப்பதால்தான் அந்தக் கட்சி, உயர் பண மதிப்பிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஜார்க்கண்ட் எம்.பி. தீரஜ் சாகுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு காங்கிரஸ் கட்சி என்ன பதில் சொல்லப் போகிறது. இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இதுகுறித்து வாய் திறக்கவில்லை.
இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார்.